91 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் வரலாறு காணாத மழைகடலூரில் ஒரே நாளில் 19 செ.மீ. கொட்டித்தீர்த்தது300 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

வளி மண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தென் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், 21-ந்தேதி (நேற்று), 22-ந்தேதி (இன்று) ஆகிய நாட்களில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், 23-ந்தேதிக்கு (நாளை) பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 1 மணிக்கு பிறகு கன மழை பெய்தது. இந்த மழை 2 மணி வரை நீடித்தது. அதன்பிறகும் விட்டு, விட்டு மழைநீடித்தது.

அதையடுத்து அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மழை நேற்று காலை 10.45 மணி வரை மிக கன மழையாக கொட்டித்தீர்த்தது. பலத்த காற்றும் வீசியது. இந்த காற்றினால் சில கடைகளில் வைத்திருந்த விளம்பர பதாகைகள் பறந்து சாலையில் விழுந்தன. சில இடங்களில் மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. மேலும் கடலூர் செம்மண்டலத்தில் வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல், பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கீழே சரிந்து விழுந்தது. 

அதிகாலையில் இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகள், ஓடையாக மாறின. குறிப்பாக கடலூர் நேதாஜிசாலை, சில்வர் பீச் ரோடு, பாரதி ரோடு, நெல்லிக்குப்பம் சாலை, லாரன்ஸ் ரோடு, திருவந்திபுரம் சாலை, கூத்தப்பாக்கம், மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் என நகரின் அனைத்து இடங்களிலும் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த சாலைகளில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றதை காணமுடிந்தது. இது தவிர மஞ்சக்‌குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டு மைதானம், புதுக்குப்பம் ஆயுதப்படை மைதானம், ஆயுதப்படை குடியிருப்பு, புதுக்குப்பம், புதுப்பாளையம் புதுத்தெரு, மணலி எஸ்டேட், வண்ணாரப்பளையம், வன்னியர்பாளையம், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம் ஜனார்த்தனன்நகர், சண்முகா நகர், விஜயலட்சுமி நகர், பெருமாள்நகர், நத்தவெளி சாலை, வண்டிப்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. காலி மனைகளிலும் தண்ணீர் தேங்கி, குளம்போல் காட்சி அளித்தது. 

இது தவிர கடலூர் நகரில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் தண்ணீரை வாளி மற்றும் பாத்திரங்கள் மூலம் வாரி இறைத்து வெளியேற்றினர். சில வீடுகளில் தண்ணீர் அதிக அளவு தேங்கி நின்றதால் வடிய வைக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர். கனமழையால் கடலூர் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. 

சாலைகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் சென்றதால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். சிலர் பள்ளங்களில் விழுந்து எழுந்து சென்றனர். தண்ணீரில் வாகனங்கள் பழுதாகி நின்றதால் சிலர் அவற்றை தள்ளிக்கொண்டு நடந்து சென்றதையும் பார்க்க முடிந்தது.

இருப்பினும் விடாது மழை பெய்ததால் அனைத்து வாய்க்கால்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கெடிலம், தென்பெண்ணையாற்றிலும் தண்ணீர் அதிக அளவில் சென்றது. காலை 11 மணிக்கு பிறகு மழை நின்றது. இதனால் வெள்ளத்தில் மிதந்த கடலூர் நகரில் பல இடங்களில் தண்ணீர் வடியத்தொடங்கியது. 

கடலூரில்   வரலாறு காணாத மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இது பற்றி அவர் மேலும் கூறுகையில், கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் பெய்த மழையானது புதிய வரலாற்று சாதனையாக பதிவாகி உள்ளது. கடலூரில் இன்று (நேற்று) காலை 8.30 மணி வரை பெய்த மழை 19 சென்டி மீட்டர் பதிவாகி உள்ளது.

கடந்த 9.2.1930 அன்று கடலூரில் 11.9 சென்டி மீட்டர் மழை பெய்ததே பிப்ரவரி மாதத்தில் பெய்த அதிகபட்ச மழையாக இருந்தது. ஆனால் 91 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விடிய, விடிய பெய்த கனமழை, முந்தைய சாதனையை முறியடித்தது.

கடலூரில் ஒரே நாளில் 19 சென்டி மீட்டர் மழை என்பது கடுமையான மழை பொழிவாகும். இதில் காலை 4 மணி முதல் 8.30 மணி வரை மிக கனமழை பெய்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மழையா? என்று பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். இந்த வளி மண்டல சுழற்சியானது வடகிழக்கு பருவத்தின் நீட்சியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல இடங்களில் வடகிழக்கு பருவ மழை போன்ற வானிலை நிலவும் என்றார்.

இதேபோல் வானமாதேவி, குறிஞ்சிப்பாடி, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, கொத்தவாச்சேரி, வடக்குத்து, லால்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், மே.மாத்தூர், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், அண்ணாமலைநகர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது.

 நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 19 சென்டி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக பெலாந்துறையில் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில சராசரியாக 44.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.