கடலூர் மாவட்டத்தில் தேசிய திறனாய்வுத்தேர்வை 3,550 பேர் எழுதினர்

அரசு, உதவிபெறும், மெட்ரிக் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவர்கள் 12-ம் வகுப்பு வரை படிக்க மத்திய அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்காக அவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் உதவி தொகை தேர்வு நடத்தப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்காக 3,820 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.


அவர்களுக்கு கடலூர், விருத்தாசலம், வடலூர், சிதம்பரம் ஆகிய கல்வி மாவட்டங்களில் 35 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்களுக்கு நேற்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. இருப்பினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாணவ-மாணவிகள் முன்கூட்டியே தேர்வு மையத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மனத்திறன் படிப்பு தேர்வு தொடங்கி 11 மணி வரையிலும், 11.30 மணிக்கு தொடங்கிய படிப்பறித்தேர்வு மதியம் 1 மணி வரையிலும் நடந்தது. இந்த தேர்வை 3550 மாணவ-மாணவிகள் எழுதினர். 270 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.


இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அவர்கள் 12-ம் வகுப்பு படிக்கும் வரை மாதந்தோறும் மத்திய அரசு ரூ.1000 வழங்குகிறது. இந்த தேர்வில் மாணவர்கள் யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டார்களா? என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாவிடம் கேட்ட போது, அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.