கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

வளி மண்டல மேலடுக்கில் மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை நேற்று காலை 10.45 மணி வரை பெய்தது. அதன்பிறகு மழை இல்லை. இருப்பினும் விடிய, விடிய காற்றுடன் பெய்த கன மழையால் கடலூரில் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகியது.

இதனால் விவசாயிகள் பயிரிட்டிருந்த வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளது. கடலூர் அருகே உச்சிமேடு, ஞானமேடு, சுபஉப்பலவாடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டிருந்த மிளகாய், கத்திரிக்காய், வெங்காயம், வெண்டை, மணிலா வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் சுமார் 200 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் வீணாகும் நிலை உள்ளது.

அதேபோல் கிளிஞ்சிக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டிருந்த 100 ஏக்கர் மணிலா வயல்களிலும், குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள 200 ஏக்கர் எள் வயல்களிலும் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.


இது தவிர தாமதமாக நடவு செய்து, அறுவடைக்கு தயாராக இருந்த நடுவீரப்பட்டு, நெல்லிக்குப்பம், திருவந்திபுரம், வானமாதேவி ஆகிய பகுதிகளில் உள்ள வயல்களில்  50 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது. சில இடங்களில் வயல்களே தெரியாத அளவுக்கு நெற்பயிர்கள் மூழ்கி கிடக்கிறது. இதை வடிய வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் மழைநீர் முழுமையாக வடிந்த பிறகே சேத விவரம் தெரிய வரும். இருப்பினும் மழைநீர் வயல்களில் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.